தலைவர்களுக்கு பிரியாணி ஊட்டுவதன் மூலம் வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்க முடியாது: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு.!

வரும் ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.விடியோ வெளியிட்டு பிரசாரம் செய்த அவர், அரசியல் லாபத்துக்காகவோ, உண்மையை மறைக்கவோ காங்கிரஸ் ஒருபோதும் நாட்டைப் பிரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “ஒருபுறம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம், கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு, தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, சரி செய்யாமல், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இன்னும் குற்றம் சாட்டி வருகிறது.பிரதமர் பதவிக்கு என சிறப்பான முக்கியத்துவம் உள்ளதாக உணர்கிறேன். தவறுகளை குறைத்து மதிப்பிடுவதற்கு வரலாற்றை குறை கூறுவதை விட பிரதமர் கண்ணியத்தை காக்க வேண்டும். நான் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது, ​​எனது பணி மூலம் பேசினேன். உலகத்தின் முன் தேசத்தின் மதிப்பை இழக்க நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் குலைக்கவில்லை. நான் பலவீனமானவன், அமைதியானவன், ஊழல்வாதி என பொய்யாக குற்றச்சாட்டிய பிறகு, பாஜகவும் அதன் பி மற்றும் சி அணியும் நாட்டின் முன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் எனக்கு திருப்தியாவது உள்ளது.அவர்களுக்கு (பாஜக தலைமையிலான அரசு) பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை. இப்பிரச்னை தேசத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் அமர்ந்து அதை ஒடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தலைவர்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதாலோ, ஊஞ்சலில் ஆடுவதாலோ, பிரியாணி ஊட்டுவதன் மூலமோ வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்கமுடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன்.நாம் ஒருபோதும் அரசியல் லாபங்களுக்காக நாட்டைப் பிரிக்கவில்லை. நாங்கள் ஒருபோதும் உண்மையை மறைக்க முயற்சிக்கவில்லை. நாட்டின் மதிப்பையோ, பிரதமர் பதவியையோ நாங்கள் ஒருபோதும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. இன்று மக்கள் பிளவுபட்டுள்ளனர்.இந்த அரசாங்கத்தின் போலி தேசியவாதம் வெற்றாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது. பிரித்தானியர்களின் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் பாஜகவின் தேசியவாதம் உள்ளது. அரசியலமைப்பு நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்படுகின்றன.இதையும் படிக்க |உள்ளூர் மக்களுக்கான 75% இட ஒதுக்கீடு; இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்சில நாட்களுக்கு முன், பிரதமரின் பாதுகாப்பு என்ற பெயரில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் மாநில மக்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் முயற்சி நடந்தது. விவசாயிகள் போராட்டத்தின் போது, ​​பஞ்சாப் மற்றும் பஞ்சாபியத்தை அவமதிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாபியர்களின் வீரம், தேசபக்தி மற்றும் தியாகத்தை உலகமே போற்றுகிறது.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஒரு உண்மையான பஞ்சாபி இந்தியனாக, இவை அனைத்தும் என்னை மிகவும் காயப்படுத்தியது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *