
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜு என்பவர் எழுதிய, ‘தலித் உண்மை’ என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ‘பட்டியல் இனத்தை சேர்ந்தோருக்கு அதிக சலுகைகள் கொடுத்தது தி.மு.க., ஆட்சியில் தான். 1971ல், அப்போதைய தி.மு.க., ஆட்சியில் தான், பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு 2 சதவீதம் உயர்த்தப்பட்டு, 18 சதவீதமானது. இது தான் திராவிட மாடல் ஆட்சி’ எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்து, பா.ஜ., மாநில தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர், ‘தடா’ பெரியசாமி கூறியதாவது:கடந்த 1971ல், பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதம் உயர்த்தியதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அப்போது இருந்த மக்கள் தொகை அடிப்படையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை தான் வழங்கினரே தவிர, யாரும் யாருக்கும் யாசகம் கொடுக்கவில்லை. அப்படி சலுகை வழங்கி இருந்தால், இப்போதும் வழங்கி இருக்க வேண்டுமே. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில், தாழ்த்தப்பட்ட இனத்தவர், 24 சதவீதமாக உள்ளனர். அப்படி என்றால், 18 சதவீத இட ஒதுக்கீட்டை, 24 சதவீதமாக ஏன் உயர்த்தவில்லை?
ஏற்கனவே இருக்கும் 18 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலை வாய்ப்பில், தாழ்த்தப்பட்டோர் 6 சதவீதம் பேர் தான் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். மீதம் இருக்கும், 12 சதவீத இடங்களுக்கு, சிறப்பு ஏற்பாட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோரை கொண்டு ஸ்டாலின் நிரப்புவாரா?கடந்த, 2001ல் ஆட்சி பொறுப்பில் இருந்த கருணாநிதி, 145 இடங்களில் சமத்துவபுரம் அமைக்கப்படும் என அறிவித்து, அதை செயல்படுத்தினார். 14 ஆயிரத்து 500 வீடுகள், 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டன.
மொத்த வீடுகளில், 40 சதவீதம் தாழ்த்தப்பட்டோருக்கும், மீதி வீடுகள் இதர ஜாதியினருக்கும் ஒதுக்கப்பட்டன.
இந்த திட்டத்துக்கு தேவையான நிதி முழுதும், ஆதிதிராவிடர் நலத் துறையில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால், பயனாளிகளில், 40 சதவீதம் பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர். இது தான் திராவிட மாடல் சமூக நீதியா?கடந்த, 2006 செப்., 16ல் அப்போதைய தி.மு.க., அரசு, இலவச கலர் ‘டிவி’ திட்டத்தை செயல்படுத்தியது. அனைத்து சமூக மக்களின் திட்டமான அதற்கான மொத்த தொகையையும், ஆதிதிராவிடர் நலத் துறையில் இருந்து பெற்றனர்.
அகில இந்திய பட்டியல் ஆணைய துணை தலைவராக இருந்த என்.எம்.காம்ளே, 2010 பிப்., 19ல், ஆய்வுக்காக தமிழகம் வந்தபோது, இதை கடுமையாக கண்டித்தார். பட்டியல் இனத்தவருக்கு பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட, ‘பஞ்சமி’ நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய, 2011ல், ஓய்வு பெற்ற
நீதிபதி மருதமுத்து கமிஷன் அமைக்கப்பட்டது. 10 ஆண்டுகளை கடந்த பின்பும், அறிக்கை தாக்கல் செய்ததாக தெரியவில்லை. சட்டசபை கூட்டத் தொடரின் போது, ‘பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை தடுக்க, பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும்’ என, பா.ஜ., – எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசினார்.
‘அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளித்தார். இன்று வரை, எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான், திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதியா?பட்டியல் இனத்தவருக்காக, மத்திய அரசு சார்பில், ‘சிறப்பு உட்கூறு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன் வாயிலாக மத்திய அரசிடம் இருந்து, மாநில அரசுகளுக்கு ஏராளமான நிதி வருகிறது. அந்த நிதியை, தமிழக அரசு முழுமையாக செலவழிப்பதில்லை. 1997 — 98ல், 594.53 கோடி; 1998 — 99ல், 509.70 கோடி; 1999 — 2000ல், 169.07 கோடி ரூபாய் என செலவழிக்காமலே திருப்பி அனுப்பியது.
இப்படி, தி.மு.க., ஆட்சியில், பட்டியலினத்தவருக்கு எதிராக எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், பேசுவது சமூக நீதி பற்றி தான். இது தான் திராவிட மாடல் ஆட்சி என்றால், அப்படியொரு ஆட்சியே தேவை இல்லை.இவ்வாறு அவர் கூறினார் பாஜக வின் மாநில நிர்வாகி தடா.பெரியசாமி திராவிட மாடல் ஆட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.