தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் சமூக நீதி தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் பிடிஆர் வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு
சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும். இந்த சமத்துவபுரங்கள் சீரமைப்பு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவை மாற்றி அமைக்கப்படும். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி ஆகும். இதன் மூலம் அவர்களுக்கு 443 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இது போக வரும் ஆண்டு நிதியிலும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.
அதன்படி வரும் நிதியாண்டில் அவர்களுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கித்தரப்படும். அதன்மூலம் 1000 புதிய வீடுகள் இருளர்களுக்கு கட்டித்தரப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் இருளர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அதற்கான பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருளர்கள் சொந்த வீடு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். பல வருடமாக ஒரே ஊர்களில் இருக்கும் இருளர்களுக்கு கூட சொந்த வீடுகள் இல்லை. இவர்களின் கஷ்டங்களை நிஜ பின்னணியோடு சமீபத்தில் ஜெய் பீம் படம் வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படிப்பட்ட நிலையில்தான் இவர்களுக்கு மொத்தமாக 1443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.