
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்வது, புதிய தொழில்களுக்கு அனுமதி அளிப்பது, மேகதாது அணை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய கொள்கைகள் உருவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு உடனடியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை சீர்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கு வாய்ப்புள்ளது.இதேபோல், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள தடுப்பு பணிகள், மீட்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தற்போது நடந்து வரும் தூர்வாரும் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார் எனக் கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நேற்று மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதேபோல், ஜூலை 28ஆம் தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. விளையாட்டுப் போட்டிகள், தொடக்கம் மற்றும் நிறைவு விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.