தமிழகம் முழுவதும் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி.!

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் திட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தை நடத்துகின்றன.சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எம்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் குதித்துள்ளன. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் பெருமளவில் போராட்டத்தில் இறங்கியதால் இயல்பை விட பாதிப்பு அதிகமாக இருந்தது.“ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது” என மத்திய-மாநில அரசுகள் எச்சரித்தபோதும் கூட அவற்றை மீறி இன்று வேலைநிறுத்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பொதுபோக்குவரத்தை இயல்பாக இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தது. என்ற போதிலும் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலைநிறுத்தம் தீவிரமாக உள்ளது.தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 70 சதவீத பஸ்களை இயக்க முடியவில்லை.பஸ்களை குறைந்த அளவிலாவது இயக்குவதற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வில் 60 ஆயிரம் பஸ் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் முழுமையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பஸ் சேவை முடங்கியது. தி.மு.க. கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் போராட்டம் தீவிரமாக உள்ளது.மேலும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இன்று காலை அச்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. டெப்போக்களில் இருந்து பஸ்களை எடுக்க டிரைவர், கண்டக்டர்கள் வராததால் வழக்கமான சேவை நடைபெறவில்லை.சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி நகரங்களை மையமாக கொண்டு செயல்படுகின்ற அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 19 ஆயிரம் பஸ்கள் தினமும் இயக்கப்படும். ஆனால் இன்று அவற்றில் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை.அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மூலம் ஓரளவிற்கு பஸ்களை இயக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் குறைந்த அளவு டிரைவர், கண்டக்டர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினார்கள். வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் மட்டுமின்றி நகர பேருந்துகளும் பெருமளவில் ஓடவில்லை. தனியார் பஸ்கள் முழுமையாக ஓடியதால் அதில் கூட்டம் நிரம்பி வழிந்தது.ஒவ்வொரு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ்களை வெளியே எடுத்து செல்ல டிரைவர், கண்டக்டர்களை அதிகாரிகள் அழைத்தபோதும் அவர்கள் முன்வரவில்லை. இதனால் டெப்போக்களில் பஸ்கள் முடங்கி கிடந்தன.சென்னையில் 3,175 மாநகர பஸ்கள் தினமும் இயக்கப்படும். இவற்றில் 80 சதவீத பஸ்கள் கூட ஓடவில்லை. 31 டெப்போக்களிலும் பஸ்களை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 300 பஸ்களுக்கு குறைவாகவே ஓடியதால் பொதுமக்கள் பஸ் நிறுத்தங்களிலும், பஸ் நிலையங்களிலும் நீண்ட நேரம் காத்து நின்றனர்.பஸ்கள் ஓடாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அரசு பஸ்களை நம்பி பயணம் செய்யக்கூடிய மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று சென்றனர்.இதேபோல் வங்கி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் மற்றும் காசோலை பரிவர்த்தனை பணிகள் முழுமையாக முடங்கின.7 ஆயிரம் வங்கிகளில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் வங்கி சேவை 2 நாட்களுக்கு கடுமையாக பாதிக்கும் என்று அனைத்து வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.ஏ.டி.எம்.களில் நிரப்பி வைத்திருந்த பணமும் பல இடங்களில் தீர்ந்து விட்டதால் மூடப்பட்டுள்ளன. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று 3-வது நாளாக வங்கி பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.வங்கி பணிகள் மட்டுமின்றி பிற மத்திய, மாநில அரசு அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டன. எல்.ஐ.சி., தபால், வருமானவரித்துறை, சுங்கம், கலால், கணக்குத் தணிக்கைத்துறை, மின்சாரத் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *