
சென்னை–வங்கக் கடலில் சுழலும் ‘அசானி’ புயல், இன்று இரவு ஆந்திர கடற்கரையை நெருங்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் விசாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.எப்போதும் இல்லாத வகையில், வங்கக் கடலில் கோடை காலத்தில் புயல் உருவாகியுள்ளது. அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.அசானி புயலானது, தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 410 கி.மீ., – ஒடிசாவின் புரி நகரில் இருந்து, 590 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் மெதுவாக கரையை நோக்கி நெருங்கி வருகிறது. இப்புயல், இன்று இரவு 10:00 மணியில் இருந்து, ஆந்திராவில் விசாகப்பட்டினத்தை மையமாக கொண்டு, அதன் சுற்றுப்புற மாவட்டங்களை நோக்கி, புயலை சுற்றிய மேக கூட்டப்பகுதி நுழையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் நேற்று மாலை கடலுக்குள் கனமழை பெய்து வந்த நிலையில், அது படிப்படியாக நகர்ந்து, ஆந்திராவில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், மணிக்கு 70 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் மசூலிப்பட்டினம் முதல் காக்கிநாடா, ஏனாம், விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் வரையில், கடலோரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், மழைக்கான வாய்ப்புள்ளதாக, பல்வேறு வானிலை ஆய்வு நிறுவன குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தீவிர புயலாக உள்ள அசானி, ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதியை இன்று நெருங்கும். பின், வடகிழக்கில் திரும்பி, ஒடிசா கடற்கரையை நெருங்கும்.இதனால், ஆந்திராவின் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும். இன்று மாலை முதல் ஒடிசா கடற்பகுதியில், மிக கனமழை பெய்யும். மத்திய மேற்கு கடற்பகுதியில் இன்று மணிக்கு, 120 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு வங்க கடல் பகுதிகளில், 90 கி.மீ., வேகத்திலும், ஆந்திராவின் வடக்கு பகுதியில், மணிக்கு 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும்.இன்றும், நாளையும் வங்க கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். வரும், 12ம் தேதி வரை மீனவர்கள் வங்க கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் அல்லது விரைந்து கரை திரும்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.