
சிவகங்கை: கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் படுகொலை செய்யபப்ட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 27 பேருக்கான தண்டனை விவரங்களை நாளை சிவங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். 2018-ம் ஆண்டு மே மாதம் கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கும்பல் ஒன்று கச்சநத்தம் கிராமத்துக்குள் நுழைந்து கொடூரமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.இந்த வன்முறையில் கச்சநத்தம் கிராமத்தில் வீடுகள் தாக்கப்பட்டன. அத்துடன் வன்முறை கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கச்சநத்தம் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் தமிழகத்தையே உலுக்கியும் எடுத்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கச்சநத்தம் படுகொலைகளுக்கு நீதி கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.கச்சநத்தம் படுகொலை தொடர்பாக விசாரித்த போலீசார் ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த மொத்தம் 33 பேரை கைது செய்தனர். இவர்களில் அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஆனால் தங்களது கிராமத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவரங்காடு கிராம மக்கள் முறையிட்டிருந்தனர்.இந்நிலையில் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் அண்மையில் நிறைவடைந்தன. இதனையடுத்து கடந்த ஜூலை 27-ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனால் திருப்பாச்சேத்தி பகுதியில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1-ந் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.இவ்வழக்கை விசாரித்த சிவகங்கை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த குற்றம்சாட்டப்பட்டவர்களில் 27 பேர்ர் குற்றவாளிகள் என அதிரடியான நேற்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட இந்த 27 பேருக்கான தண்டனை விவரங்கள் நாளை (ஆகஸ்ட் 3-ந் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. இதனையடுத்து திருப்பாச்சேத்தி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.