தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும்! மதுவிலக்கை கையிலெடுக்கும் பாமக! அன்புமணி மீண்டும் முழக்கம்!

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் தீமைகள் மற்றும் சீரழிவுகள் குறித்து யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;காவிரி பாசன மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் ஒன்றான மயிலாடுதுறை பழைய பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கும், தமிழ்மணி என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் ஜீவானந்தத்தை தமிழ்மணி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.மயிலாடுதுறை நகரில் மொத்தம் 5 டாஸ்மாக் மதுக்கடைகள் இருப்பதாகவும், அந்தக் கடைகளில் இருந்து மதுப்புட்டிகளைப் பெற்று சிலர் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்வதில் ஏற்படும் போட்டி தான் படுகொலையில் முடிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும்.மயிலாடுதுறையில் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இதே சூழல் தான் நிலவுகிறது. டாஸ்மாக் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சந்து கடைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை விட சந்து கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சந்து கடைகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. காவல்துறையினருக்கும் தெரிந்தே இது நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் தீமைகள் மற்றும் சீரழிவுகள் குறித்து யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாகவும், சாலைவிபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. தற்கொலைகள், மனநல பாதிப்பு ஆகியவற்றிலும் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. மதுவின் ஆதிக்கத்தில் நடைபெறும் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன.மதுவின் தீமைகள் மற்றும் சீரழிவுகளில் இருந்து மக்களைக் காப்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. இப்போது சட்டவிரோத மது விற்பனையால் மோதல்களும், கொலைகளும், சட்டம் & ஒழுங்கு சீரழிவுகளும் நிகழத் தொடங்கியிருப்பது தமிழ்நாட்டின் பொது அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.தமிழ்நாட்டு மக்களின் தலையாய கோரிக்கையும், தமிழ்நாட்டில் கருத்தொற்றுமை நிலவும் விஷயமும் மதுவிலக்கு தான். மது விலக்கு தான் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்விடியலைத் தரும். தமிழ்நாட்டின் இளைஞர் சக்தி யாருக்கும் பயன்படாமல் வீணடிக்கப்படுவதற்கும், அமைப்பு சாராத வேலைகளுக்கு பணியாளர்கள் கிடைக்காத நிலை நிலவுவதற்கு மது தான் முக்கியக் காரணமாகும். எனவே, தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் காக்கும் வகையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *