தமிழகத்தில் ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச் சாட்டு.

சென்னை பட்டினபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலை ஏற்காமல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: விக்னேஷ் மரணம் தொடர்பான சி.பி.ஐ., விசாரணை நடத்தினால், நேர்மையாக நியாயமாக இருக்கும்.

இந்த மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது.தருமபுர ஆதினத்தில் பல ஆண்டுகளாக பட்டின பிரவேச நிகழ்ச்சி நடக்கிறது. இது ஆன்மிக நிகழ்ச்சி. பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நடந்து வருகிறது. அங்கே தங்கியிருந்து பல்லக்கு தூக்குபவர்கள், பாரம்பரியமாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. இதற்கு தடை செய்ய அதிகாரம் இல்லை. ஆனால், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்தது கண்டிக்கத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டிக்க தக்கது. ஆன்மிகத்தில் அரசு தலையிடுவதை ஏற்று கொள்ள முடியாது.முதல்வர் பொதுவானவர். அவர் எந்த கட்சியையும், மதத்தையும் சாராதவர். பல்வேறு மதங்களை சேர்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. முதல்வர் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். மக்களின் விருப்பமும் கூட.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. ரவுடிகள் சுற்றுலா செல்வது போல உலா வருகின்றனர். போதை பொருட்கள் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவு விற்பனையாகின்றன. கடந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. ஊழல் இல்லாத துறை இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திறமையற்ற அரசு என ஓராண்டில் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *