
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுநாராயண். இவரது காதலி கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் மன அழுத்தமும் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் காவல்துறையினர் எனது காதலி தற்கொலை குறித்து முறையான விசாரணை நடத்தவில்லை. இதற்கு நீதி வேண்டும் என கேட்டு பாபுநாராயண் நேற்று மாலை தெற்கு மும்பையில் உள்ள மகாராஷ்டிரா அரசு தலைமை செயலகமான மந்திராலயாத்தில் மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் முதல்வர் முக்கியமான கூட்டத்தில் இருப்பதால் சந்திக்க முடியாது என அங்கிருந்த பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் திடீரென அந்த கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த கட்டிடத்தின் நடு பகுதியில் பாதுகாப்பு வலை கட்டப்பட்டு இருந்ததால் பாபுநாராயண் அதில் விழுந்தார். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்டனர். இந்த சம்பவத்தில் அவர் லேசான காயம் அடைந்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.