
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த நிலையில், அதை தொடர்ந்த வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை முறையாக நடத்தக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாணவி பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் ஜனவரி 20ம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மேலும் ஜிப்மர் மருத்துவ குழு நடத்திய பிரேத பரிசோதனையின் அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார். விசாரணையின் தற்போதைய நிலை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர், மாணவி பயன்படுத்திய செல்ஃபோன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், மற்ற விசாரணை விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். இதையடுத்து, ஜிப்மர் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர் ராமலிங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.