தஞ்சாவூரில் ரூ.2.5 கோடியில் கட்டிய பாலம் 15 நாளில் உடைந்தது; பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் கிராம மக்கள் குற்றச்சாட்டு.!

தஞ்சாவூர்: தஞ்சாவூர், கீழவாசல் அருகே சிராஜ் நகரில், பழைய ராமேஸ்வரம் சாலையில் உள்ள ஆதாம் வாய்க்கால்களில், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி சுமார் ரூ.6.5 கோடியில் நடைபெற்றது. இதில், சிறிய பாலம் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு 15 நாட்களில் இன்று(ஏப்ரல் 20) காலை திருவையாறு பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் பாரத்தை தாங்க முடியாமல், பாலம் இடிந்து உள்வாங்கியது. இதில் லாரியின் பின் சக்கரம் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது; மதுரையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணி சரியாக நடைபெறவில்லை என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஏற்கனவே, இந்த பணியின் போது வாய்க்காலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதை மீண்டும் அவர்கள் கட்டினார்கள். எனவே பணி முறையாக நடைபெறவில்லை. இதனால் லாரி விபத்துக்குள்ளானது.

இப்பகுதியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி வேன் விபத்தில் சிக்கினால், மாணவர்களின் கதி என்னவாகும். எனவே தரமற்ற முறையில் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனம் மீதும், இந்த பணிகளை ஆய்வு செய்யாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: பணி முடிந்து 15 நாட்கள் தான் ஆகிறது. எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி லாரி அதிக பாரத்துடன் வந்ததே விபத்துக்கு காரணம். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தை லாரி உரிமையாளர் கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *