டெல்லி மாநகராட்சி தேர்தல்: ‛சீட் கிடைக்காத விரக்தியில் ஆம்ஆத்மி நிர்வாகி தற்கொலை.!

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் கட்சி தரப்பில் இருந்து தனக்கு ‛சீட்’ கொடுக்கவில்லை என்ற விரக்தியில் ஆம்ஆத்மி வர்த்தக பிரிவு செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சிகள் அனைத்தையும் கைப்பற்ற அந்த கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் யாருக்கு சீட் வழங்கலாம் என்பதை பணத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி நிர்ணயம் செய்வதாக பா.ஜ., நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மாநகராட்சி தேர்தலில் சீட் கொடுக்காத விரக்தியில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி சந்தீப் பரத்வாஜ் தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு டில்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் வசிக்கும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சந்தீப் பரத்வாஜ்,55, டில்லி மாநகராட்சி தேர்தலில் தனக்கு ‛சீட்’ கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், கட்சி தலைமை அவருக்கு ‛சீட்’ கொடுக்காமல் வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று (நவ.,24) மாலை 4:40 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு குஜ்ரேஜா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை செய்துக்கொண்ட சந்தீப் பரத்வாஜ், ஆம்ஆத்மி கட்சியின் வர்த்தக பிரிவின் செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு திருமணமாகாத இரு சகோதரிகள் மற்றும் 20 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *