டி.ஜி.பி அதிரடி போக்சே“தமிழகத்தில் முதலில் வழக்கு பதிவு… பின்னர்தான் விசாரணை..!

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸாருடன் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சைலேந்திர பாபு, “தமிழக அரசு ரௌடிசத்தை ஒடுக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. சரகம் வாரியாக ரௌடிசத்தை ஒடுக்குவதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் சரகத்திலும் ரௌடிகளை கண்காணித்து ஒடுக்குவதற்காக இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் வெளிநாடு, வெளிமாநில குற்றவாளிகளை கண்காணித்து வருகிறோம். அவர்களால் எந்த குற்றச் செயலும் நடக்கவில்லை. கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். ஆந்திராவிற்கு சென்று கஞ்சா வியாபாரியை கைது செய்து வந்துள்ளோம். அதேபோல் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளிலும் கடத்தலுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக போலீஸாருடன் அனைத்து துறை அதிகாரிகளும் சேர்ந்து கண்காணித்து வருகிறோம். அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு மாவட்டத்திலும் ரௌடிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்தொடர்பாக ஒவ்வொரு சரகத்திலும் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த பின்புதான் விசாரணையை தொடங்குகிறோம். அதனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து போக்சோ வழக்கில் புகார் அளிக்க தைரியமாக முன் வரத் தொடங்கியுள்ளனர்.

ரௌடிசம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் சிறப்பான அதிகாரிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாராட்டி சான்றிதழ் வழங்கி வருகிறேன். அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 59 காவலர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியிருக்கிறோம்” என்று கூறினார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் டி.ஐ.ஜி. மயில்வாகனன், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *