
2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.துறை தொடர்பாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துப் பேசினார். முன்னதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில்,” 2020 – 2021 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிபேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி ஆகியவைகள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது. 2003-04 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் 3639.93 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இந்நிலையில் 19 ஆண்டுகளில் இந்த வருவாய் ரூ.36 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2200 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. 2020-21ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.33,811.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.” என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் சட்டப்பேரவையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 6715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள், 3,900 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,800 க்கும் அதிகமான பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதம் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.