டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு என்ன செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள், கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம், இரு வேறு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு விசாரணை பரிந்துரைக்கப்பட்டது.இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் கடைகள் தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகளும், கிராம சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக விதிகளில் திருத்தம் கொண்டுவருவது பற்றி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி, திருத்த விதிகளை தாக்கல் செய்தார்.ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்த கடைகளையும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் அந்த திருத்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை முடித்து வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural news என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

செய்தியாளர் சிவபெருமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *