
டாக்டர் அம்பேத்கர் விருது பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அயராது உழைத்த சமத்துவம் மற்றும் சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் அம்பேத்கரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் தொண்டாற்றிய ஒருவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது 1995-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று முதலமைச்சர் டாக்டர் அம்பேத்கர் விருதை வழங்கி வருகிறார். இந்நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முன்னாள் நீதியரசர் சந்துருவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டில் இருந்து டாக்டர் அம்பேத்கர் விருது பரிசுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள நிலையில், 4 புதிய தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 22 தனியுறு சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், தனியுறு சிறப்பு நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 4 புதிய தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதர மாவட்டங்களில் இவ்வழக்குகளை விசாரணை செய்ய தற்போது உள்ள குற்றவியல் அமர்வு நீதி மன்றங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2022 – 23 ஆம் நிதி ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2022 -23 ஆம் நிதியாண்டில் ரூ.175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது எனவும், பழங்குடியினர் வாழும் உட்புறப் பகுதிகளில் பள்ளிகள் துவங்க முன்வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் 2022 – 23 ஆம் நிதியாண்டில் ரூ.14.50 கோடி ஒதுக்கீடுசெய்யப்படுள்ளது எனவும், 2022 – 23 ஆம் நிதி ஆண்டில் வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.4281.76 கோடியில் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.3,571.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.