
சென்னை: “இந்த முறைதான் தனியாக வந்து வாக்களிக்கிறேன், அதனை நினைத்துக்கொண்டேதான் வந்தேன்” என்று வி.கே.சசிகலா உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடியில் வி.கே.சசிகலா வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “வாக்களித்திருக்கிறேன். இந்தமுறைதான் நான் தனியாக வந்து வாக்களிக்கிறேன். அதை நினைத்துக்கொண்டே வந்தேன்.இந்த அரசைப் பொறுத்தவரை, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். எனவே ஆளுங்கட்சியினர், அராஜகம் செய்யக்கூடாது. காவல்துறையும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.தமிழக மக்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள். தேர்தலை நடத்துவதற்கு எல்லா வசதிகளும் செய்துவிட்டால் மட்டும் போதாது, நியாயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கடசி தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.