
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைக் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் முதற்கட்ட விசாரணையாக, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்து மருத்துவர்களிடம் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட விசாரணையில், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டிட்டிருந்தது. அதன்படி, இளவரசி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகினர். அதையடுத்து, விசாரணை ஆணையத்தினர், ஓ.பன்னீர்செல்வத்திடம் காலை 11.30 மணி முதல் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் மதிய உணவுக்குப் பின் மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணையைத் தொடர்ந்தது. அப்போது விசாரணை ஆணையத்தினரிடம் ஓ.பன்னீர்செல்வம், “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 -வது நாள்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன்.அதற்கு, அப்போலோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் சொன்னார். மறுநாள் காலை அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியைச் சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தினேன்.

“ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்” என விஜயகுமார் ரெட்டி கூறினார்.மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர்” என விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.மேலும், ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சரவையைக் கூட்ட சொன்னதாகவும், நான்கு நாள்கள் பரபரப்பாகப் பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு, “ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை, அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்துப் போட்டிருப்பேன்” என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.முன்னதாக காலையில் நடத்தப்பட்ட விசாரணையில், `ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’ என ஓ.பி.எஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.