
ஜமைக்கா நாட்டிற்கு 7 நாள் சுற்றுப்பயணமாக சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் “டவர் தெரு” என இருந்த ஒரு தெருவின் பெயரை மாற்றி “டாக்டர்.அம்பேத்கர் அவென்யூ” என்று பெயர் சூட்டப்பட்ட தெருவை திறந்து வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து விழாவில் உரையாற்றிய குடியரசு தலைவர் இந்தியர்கள் மனதில் ஜமைக்காவுக்கு மிக முக்கிய இடம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.அரசு முறைப் பயணமாக ஜமைக்கா சென்றுள்ள அவர், அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஆல்லென் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய ராம்நாத் கோவிந்த், 175 ஆண்டுகளுக்கு முன்பு 200 இந்தியர்கள் கப்பல் மூலம் ஜமைக்காவுக்கு வந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது முதல், ஜமைக்காவில் உள்ள இந்தியர்கள், தங்கள் வாழ்வை ஜமைக்காவின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கிறிஸ் கேலி, ஜார்ஜ் ஹெட்லி, மைக்கேல் ஹோல்டிங் போன்ற கிரிக்கெட் வீரர்கள், இந்தியர்களால் மிகவும் நேசிக்கப்படக் கூடியவர்கள் என தெரிவித்த ராம்நாத் கோவிந்த், இந்தியர்களின் மனதில் ஜமைக்கா மிக முக்கிய இடம் பிடிக்க கிரிக்கெட் மிக முக்கிய காரணம் என்றார்.

இதேபோல், ஜமைக்காவின் உசேன் போல்ட், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.நிகழ்ச்சிக்கப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜமைக்காவின் வர்த்தகத் துறை அமைச்சர் அயுபின் ஹில், இந்தியாவிடம் இருந்து கோதுமை, உரம், டிரக்குகள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.