
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.வடக்கு ஜப்பானில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இரவு 8.06(உள்நாட்டு நேரப்படி) மணிக்கு 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால், ஃபுகுஷிமா கடற்கரைப் பகுதிகளில் அலைகள் உயரமாக எழுந்து காணப்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுனாமிக்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.டோக்கியோ சுற்றியுள்ள சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஷிரோஷி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த அதிவேக புல்லட் ரயில், நிலநடுக்கத்தால் தடம் புரண்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.