
சென்னை: சட்டவிரோதப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சங்கத்தின் நிர்வாகி ஒருவர், செஞ்சிலுவை சங்கத்துக்குவந்த நிதியை தனது வங்கி கணக்குக்கு மாற்றியதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை: இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த முறைகேடு குறித்து 2020-ம்ஆண்டு, சிபிஐ வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தியது.இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, நிதி நிறுவனம் தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணையை தொடங்கியது.இந்நிலையில், இது தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ருதீன் ஆகியோர் செஞ்சிலுவை சங்கத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, அதிக அளவில் சொத்துகளை சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் ரூ.3.37 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.