ஜெய்ப்பூரில் நடைபெற்ற அழகிப்போட்டியில், செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகள் ரக்சயா ‘ மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்று அசத்தல்.!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா(20). கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு குடும்ப வறுமையை பொருள்படுத்தாமல், பகுதி நேர வேலை செய்து தன்னை தயார் படுத்திக் கொண்டார்.இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ‘மோனோ ஆக்டிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதற்காக அவர், அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பார் எவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் வெற்றிபெற்றார்.பின்னர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். ஜெய்ப்பூரில் இந்த மாதம் 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில், மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று ரக்‌சயா சாதனை படைத்துள்ளார்.அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்வாகும் நபர், ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்வார். இந்த போட்டியில், நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்சயா.இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில்,சிறு வயது முதலே ரக்சயா, விளையாட்டின் மீது ஆர்வமாக கொண்டவர். மேலும் தாங்கள் அதை ஊக்கப்படுத்தியதால் படிப்படியாக வளர்ந்து, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் என தெரிவித்தனர். தொடர்ந்து வறுமையில் இருந்த பொழுது, சிலர் ரக்சயாவின் படிப்பிற்கு உதவினர். தற்போது அவர் தன் விடாமுயற்சியால் தற்பொழுது ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றுள்ளார் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *