சுவாச கோளாறு பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை தலைநகர் டெல்லியில்; 50 சதவீதம் அதிகரிப்பு அதிர்ச்சி தகவல்.!

புதுடெல்லி: டெல்லி-என்.சி.ஆர். மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக உள்ளது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நேற்று தெரிவித்து இருந்தது. இதேபோன்று உத்தர பிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா நகரில் காற்று தர குறியீடு 529 ஆக பதிவாகி உள்ளது. அரியானா குருகிராம் நகர் (478) கடுமையான பிரிவிலும், அதற்கருகே உள்ள தீர்ப்பூர் நகர் (534) கடுமையான பிரிவிலும் உள்ளன. டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று தர குறியீடு கடுமையாக மோசமடைந்து உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள சூழலில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை ஆகியவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுபற்றி லேடி ஹார்டிங்கே மருத்துவமனையின் மருத்துவர் ஷாரதா கூறும்போது, சரியான புள்ளிவிவர தகவல் இல்லை. ஆனால், அவசரகால நிலை ஏற்பட்டு உள்ளது. காற்று மாசுபாட்டால் நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகளிடையே அதிகரித்து உள்ளது. இதனால், அந்த அறிகுறிகளுடன் சேர கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்பே வேறு சில சுவாச கோளாறுகளும் உள்ளன. நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் எளிதில் பாதிப்புக்கு இலக்காகி விடுகின்றனர். அவர்களுக்கு வேறு சுவாச பாதிப்புகளான இருமல், மார்பு வலி மற்றும் சுவாசிப்பதில் அதிக சிரமம் ஆகியவை காணப்படுகிறது. இதுவே தற்போதுள்ள நிலைமையாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது என கூறியுள்ளார். சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர், டாக்டர்:ரன்தீப்குலேரியா கூறும்போது, புகையிலை உபயோகிப்பதில் ஏற்படும் பாதிப்புகளை விட காற்று மாசு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிகரெட் புகைப்பது, புகையிலையை தவிர்ப்பது பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், அவற்றை விட காற்று மாசால் அதிக பாதிப்பு மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என அவர் கூறியுள்ளார். 2017-ம் ஆண்டு வெளியான செய்தி நிறுவன தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் 12.4 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதனால், இது அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. அதிக பாதிப்புகளையும் உண்டு பண்ணுகிறது. பலருக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது என குலேரியா கூறியுள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகள் காற்று மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கு தீவிர காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *