சீனாவை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்!: சீன மொழி கற்பித்தலை தீவிரப்படுத்தும் ஒன்றிய அரசு..!!

டெல்லி: சீனாவுக்‍கு எதிராக இந்திய ராணுவத்தை முழுவீச்சில் தயார்படுத்த ராணுவ வீரர்களுக்‍கு சீன மொழி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ம் ஆண்டு இந்திய, சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவானது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், சில இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டாலும், தற்போதும் பல இடங்களில் இரு நாட்டு வீரர்களும் குவிக்‍கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எல்லையில் படையை பலப்படுத்தும் அதேநேரம், சீன வீரர்களுடன் அசாதாரண சூழலில் மொழிப்பிரச்சனையை தீர்க்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.பாகிஸ்தானை விட சீன எல்லையில் அதிக பிரச்னைகள் நிலவுவதாகவும், பாகிஸ்தானை பொறுத்தவரையில் மொழி, கலாச்சார வேறுபாடுகள் எதுவுமில்லை என்றும் ஆனால் சீனா முற்றிலும் மாறுபட்டது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எனவே சீனாவில் பெரும்பான்மையாக பேசப்படும் மாண்டரின் மொழி இந்திய ராணுவ வீரர்களுக்கு கற்றுத் தரப்படுவதாகவும், சுமார் 20 ராணுவ அதிகாரிகள், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ராஷ்டிரிய ரக்‌ஷா பல்கலையில் சீன மொழி டிப்ளமோ மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை படித்து வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.கல்வி நிலையங்களிலும் சீன மொழிகளில் எம்.ஏ. பட்டத்தினை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பெறுவதற்கு வசதியாக இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீன மொழியை கற்றுத் தருவது தொடர்பாக பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை ராணுவ தளபதி நரவானே தலைமையில் ராணுவ கமாண்டர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் சீன எல்லை விவகாரம் மற்றும் வீரர்களுக்கு சீன மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.உக்ரைன் – ரஷ்யா போரில் இருந்து காற்றுள்ள பாடங்களின்படி இந்திய ராணுவத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. சீன மொழி, கலாச்சாரம், அரசியல், அந்நாட்டு பழக்க வழங்கங்கள் ஆகியவற்றில் இந்திய ராணுவம் அத்துப்படியாக வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் சீனா உடனான எல்லை காவல் பணிக்கு செல்லும் அதிகாரிகள் நீண்ட காலம் அங்கேயே பணியாற்றும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *