
சிறுமிகள் அதிக அளவில் தங்களுக்கு தெரிந்த மற்றும் உறவினர்கள் மூலம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பள்ளியில் 6-வது வகுப்பு படிக்கும் மாணவியையும் அது போன்று சொந்த உறவினர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி இருக்கின்றனர். அந்தச் சிறுமி படிக்கும் பள்ளியில் அவர் ஆசிரியர் நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கினார். அப்படி விளக்கும் போதுதான் அந்தச் சிறுமி தனது வீட்டில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆசிரியரிடம் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் தன் தந்தை, சகோதரன் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி தெரிவித்திருக்கிறார்.அதைக்கேட்டு அதிர்ந்து போன ஆசிரியர், உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார். அதையடுத்து, போலீஸார் அந்த 11 வயதாகும் சிறுமியிடம் மேற்கொண்டு விசாரித்ததில், “வீட்டில் என் தாத்தாவும், மற்றொரு அங்கிளும் தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்தனர். அதேபோல, என்னுடைய தந்தையும், அண்ணனும் எனக்கு பல ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வருகின்றனர்” என்று போலீஸில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை, சகோதரன், தாத்தா மற்றும் ஒருவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

சிறுமியின் சகோதரன் தலைமறைவாகிவிட்டான்.பீகாரைச் சேர்ந்த அந்தச் சிறுமியிடம் 2017-ம் ஆண்டில் இருந்து அவர் தந்தையும், சகோதரனும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. 2020 நவம்பர் மாதத்தில் இருந்து சிறுமியை அவள் சகோதரன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்ததாக இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் அஸ்வினி தெரிவித்துள்ளார். ஆனால், அவளது தந்தை சிறுமி 6 வயதாக இருந்தபோதிலிருந்தே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அனைத்து சம்பவங்களும் தனித்தனியாக நடைபெற்றிருப்பதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.