சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு: பிரச்சினைகளை தீர்க்க நமது நிலம் நமதே அமைப்பு துவக்கம்.!

அன்னூர்: கோவை மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்து, 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிட்டிருந்தது. இதற்கு 6 கிராம ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி, நடைபயணம், கடையடைப்பு உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் நமது நிலம் நமதே என்ற அமைப்பின் மூலம் 17 இடங்களில் போராட்டக்குழு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அக்கரை செங்கப்பள்ளி, குன்னிபாளையம், பச்சாகவுண்டனூர், இலக்கேபாளையம், செலம்பரகவுண்டன்புதூர், தொட்டியபாளையம், கரியனூர், சொலவம்பாளையம், ஆலாங்குட்டை, கரியாக்கவுண்டனூர், ஒட்டகமண்டலம், இராசடி பொகலூர், ஆனணப்பள்ளிபுதூர், ஆத்திக்குட்டை, குழியூர் மாகாளி அம்மன் கோவில் திடல் பகுதிகளில் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமது நிலம் நமதே விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், செயலாளர் ராஜா ஆகியோர் கூறியதாவது:- தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வருகிறோம். அக்கரை செங்கப்பள்ளியில் தொடங்கி மொத்தம் 17 இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. நிலம் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டாலோ, வெளியாட்கள் நடமாட்டம் இருந்தாலோ விவசாயிகள் இந்த அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 17 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்பட்டால் அந்த பகுதிகளுக்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று விவசாயிகளுக்கு உதவுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதி அதிகம் உள்ள இடங்களை தேர்வு செய்து தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரசார நடைபயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைிவட வேண்டும். அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் மூலம் பயன்படும் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி பிரசார நடைபயணம் நடக்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் பிரசார பயணம் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *