
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளிகல்வித் துறை சார்பில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கான கண்காட்சிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட ஆட்சியர் திரு.ஷ்ரவன்குமார் கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றினர், ‘மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டும். அதற்காக, தலைமைப்பண்பு, குழு மனப்பான்மை, ஆரோக்கியமான கலந்துரையாடல், ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்தவும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் திரளான மாணவர்கள் பங்கேற்கவும், ஆசிரியர்கள் ஊக்குவிக்கவும் வேண்டும்’ என்றார். கண்காட்சியில், தகவல் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம், சுற்றுச்சூழல் சார்ந்த பொருட்கள், உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்தில் புதுமை, சுற்றுப்புற சூழல், வரலாற்று வளர்ச்சி, நமக்கான கணிதம் ஆகிய தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. 91 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் 250க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) துரைராஜ், உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ஆனந்தன், பள்ளி துணை ஆய்வாளர் வேல்முருகன் உட்பட பலர்பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.