சிட்டுக்குருவிகள் அழியவில்லை; இடம் பெயர்ந்துவிட்டன!’ – பறவைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு.!

மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு கூடுகள் அமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழநி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சிப் பட்டறை மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் குருவிக் கூடுகளை எப்படி தயாரிப்பது என்று ஒரு பயிற்சி பட்டறையும் ஒருங்கிணைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த அனுபவம் மிகுந்தவர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைக் கூறினர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு குருவிக்கூடுகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களால் உருவாக்கப்பட்ட 50 குருவிக்கூடுகள் சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளியில் பொருத்தப்பட்டன. இதில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் குருவிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவர்களால் எடுக்கப்பட்ட குருவிகளின் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி நடத்தப்பட்டது.இதுகுறித்து கூடுகள் அமைப்பின் நிறுவனர் கணேசனிடம் பேசினோம். “சிட்டுக்குருவிகள் மற்றும் மண்புழுக்களை விவசாயிகளின் நண்பன் என்று அழைப்பார்கள்.

விவசாயம் செழித்து இருக்க வேண்டுமென்றால் இந்த இரண்டு உயிரினங்களும் இருக்க வேண்டும். இல்லையென்றால் மனித குலமே அழிந்துவிடும். இந்தப் பறவையினம் இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறது என்ற கருத்து தவறானதாகும். ஏனென்றால், இது அழிந்துவிடவில்லை இடம்பெயர்ந்து சென்றுவிட்டது.சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு வீட்டின் கட்டமைப்பு முறை முக்கிய பங்கு வகித்தது. ஆனால், இன்று அது முற்றிலும் மாறிவிட்டது என்பதே முதல் காரணமாகும். இதனால் எங்கே பழைய முறை வீடுகள் இருக்கின்றதோ அங்கு இடம்பெயர்ந்துவிட்டது.

இயற்கை விவசாயத்தை செய்வதை விட்டுவிட்டு ரசாயனம் விவசாயம் செய்ய ஆரம்பித்த இதைக் கருத்தில் கொண்டுதான் கூடுகள் அமைப்பு தொடங்கப்பட்டு குருவிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். ஆரம்பகாலத்தில் வீடு வீடாகச் சென்று குருவிகளைப் பற்றி சொல்லி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கூடுகளை கொடுத்தோம். பெரியவர்களைவிட மாணவர்களிடம் கொண்டு சேர்த்தால்தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்தோம். முதலில் ராயபுரத்தில் உள்ள தனலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் 15 மாணவர்களுக்கு கூடுகளை வழங்கினோம். ஒரு கூடு செய்ய 300 ரூபாய் செலவானது.இதனால் நாங்களே கூடுகளைத் தயாரிக்க திட்டமிட்டோம். அதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் வாங்கினோம். ஒரு மாணவனின் மூலமாக கார்பென்டர் வேலையை எப்படி செய்வது என்பதைக் கற்றுக்கொண்டேன். என் மனைவி சாந்தினி உடன் இணைந்து ஆயிரம் கூடுகளை ஓராண்டில் வடசென்னையில் 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வழங்கினோம்.இதையடுத்து குழந்தைகளே கூடு செய்வதற்கான எளிய வழியை கண்டறிந்து இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வும் மற்றும் கூடுகள் தயாரிப்பது பற்றிய பயிற்சிப்பட்டறை மூலமாக 3,500 கூடுகளை வழங்கியுள்ளோம். இதில் 60 சதவிகிதம் கூடுகளுள் குருவிகள் தங்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல 3 பள்ளி வளாகத்தில் குருவிகள் சரணாலயமும் உருவாக்கியுள்ளோம். அதன் தொடர்ச்சியாகத் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள பொன்னர் சங்கர் மேல்நிலைப் பள்ளியில் இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம்.

சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வு தமிழகம் முழுக்க பரவ வேண்டும். அதன்மூலம் சுற்றுச்சூழல் குறித்த புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.கூடுகள் அமைப்பு மூலம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகள் தயாரிப்பதற்கு ஏற்ற அனைத்து வேலைகளையும் செய்து அதைப் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். கொரோனா காலகட்டத்தில், இருக்கும் இடத்திலிருந்து பத்தாயிரம் குருவிக்கூடுகள் தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் கொள்முதல் செய்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தோம். நிதி பற்றாக்குறையின் காரணமாகத் தமிழக அரசாங்கத்தின் உதவியுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு `sparrow saver award’ கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *