
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும் செயலாக்க அதிகாரிகளும் உடலோடு ஒட்டிய புகைப்படக் கருவிகளை அணியவுள்ளனர்.வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி இது நடப்புக்கு வரும்.இந்த கேமராக்கள் எவ்வளவு பயனுள்ளவை என்பதைக் கண்டறிய தேர்வுசெய்யப்பட்ட அதிகாரிகளும் மருத்துவ உதவியாளர்களும் தலைக்கவசத்திலும் உடலிலும் அணிந்து முதற்கட்ட ஆய்வுகளில் கலந்துகொண்டனர்.அவற்றில் கிடைத்த காணொளிகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.தீயணைப்பு மீட்பு அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், அபாயகரமான பொருள்களைக் கையாளும் நிபுணர்கள், தீ பாதுகாப்பு மற்றும் அபாயகரமாக பொருள்களுக்கான செயலாக்க அதிகாரிகளுக்கு உடலோடு ஒட்டிய புகைப்பட கருவிகள் வழங்கப்படும்.அடுத்த கட்டத்தில் உடலில் அணியும் புகைப்படக் கருவிகளில் கிடைக்கும் காணொளிகள் பயிற்சி பெறுவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.”சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் பொதுமக்களும் தொடர்புகொள்ளும்போது கூடுதல் பொறுப்புணர்வையும் வெளிப்படைத் தன்மையையும் உடலில் அணியும் புகைப்படக் கருவிகள் உறுதிசெய்யும். பொதுமக்கள் அதிகாரிகளிடம் தகாத வகையில் நடந்துகொள்ளவதையும் இது தவிர்க்கும்,” என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.அவசர அழைப்புகளை ஏற்றுச் செல்லும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் ஆறு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையை 2021ல் எட்டியது.அத்தகைய 29 சம்பவங்கள் நடந்தன.