சாலை வசதி இல்லாததால் அவலம்- மருத்துவமனைக்கு நோயாளிகளை 5 கி.மீ. தூக்கிச்செல்லும் மலைவாழ் மக்களின் பரிதாபம்.!நடவடிக்கை எடுக்குமா அரசு..?

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து தெற்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தமிழக-கேரள எல்லை. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ஈசல்திட்டு மலைக்கிராமத்தில் சுமார் 250 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

ஜல்லிபட்டியை அடுத்து கொங்குரார்குட்டை மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் செங்குத்தான மலையில் உள்ள இந்த செட்டில்மென்ட் கிராமத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட செங்குத்தான மலையில் கரடுமுரடான பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கீழே இறங்கி ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் ஈசல்திட்டு கிராமத்தில் வசித்து வரும் முருகன் மனைவி மாயம்மாள் (வயது 54) என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்குள்ளவர்கள் தொட்டில் கட்டி அதில் மாயம்மாளை படுக்க வைத்து 5 கிலோ மீட்டர் செங்குத்தான கரடுமுரடான மலைப்பாதையில் கொண்டு வந்து ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஈசல்திட்டு செட்டில்மென்டுக்கு சாலை வசதி அமைத்துத்தர வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் எங்கள் கிராமத்துக்கு வருகை தந்து எங்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *