
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சடையம்பட்டியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியை சேர்ந்த சுமார் 60 மாணவிகள் கல்லூரி பஸ்சில் இன்று வந்தனர்.

அந்த பஸ்சை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 63) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் வந்த போது பஸ்சின் மெயின் ஆக்சில் கட்டானது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியது.இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த கரிசல்குளம் கவுரி, அமுதா (20), ஆலடிபட்டி சுபத்ரா (21), ஏழாயிரம்பண்ணை சுபலட்சுமி (22), செவல்பட்டி பானுஷா (20), அழகுச் செல்வி (20), முத்தீஸ்வரி (20), சந்தனமாரி(20), திருவேங்கடம் அனுஷா (19), புதுப்பட்டி ரேணுகாதேவி (20), மகாலட்சுமி (20), சங்குப்பட்டி கவிதா (20), ஆண்டையாபுரம் ஜெயமாலா (20), ஆவுடை யாள்புரம் மாதவி (20), திருவேங்கடம் சாந்தாராணி (20) சங்குப்பட்டி பிரியா (22), மஞ்சுளா (22), ஆலமநாயக்கன்பட்டி சுவேதா (22) உள்பட 21 மாணவிகள் காயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவிகளை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அவர்களில் படுகாயமடைந்த 6 மாணவிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.