
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கிய இலவச வீட்டுமனைக்கு செல்லும் வழிபாதை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவ்வழியாக செல்பவரை ஜாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ்புரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர் நலத்துறையினர் சார்பில் 42 வீட்டுமனைகள் அதே பகுதியில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுமனைக்கு செல்லும் வழியை தற்போது வேறு சமூகத்தினர் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அவ்வழியாக யாரும் செல்ல கூடாது எனவும், அவ்வழியாக செல்வோரை சாதி பெயரால் தரக்குறைவாக பேசியும், அவ்வழியில் உள்ள அரசாங்கத்தால் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை சேதப்படுத்தியதாகவும், இதுகுறித்து உமராபாத் காவல்நிலையத்தில் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறியும் காமாரஜபுரம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆம்பூர் – வாணியம்பாடி சாலையில் தடுப்புகளை அமைத்து குப்பைகளை கொட்டியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் இந்நிகழ்வு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.