சவுதி அரேபியாவில் இருந்து கோழிக்கோட்டிற்கு 197 பேருடன் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீர் என்ஜின் கோளாறு; தரை இறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.!

திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு ஒரு தனியார் விமானம் நேற்று மாலை புறப்பட்டது. விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 191 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 197 பேர் இருந்தனர். விமானம் நேற்று மாலை 6 மணிக்கு தரை இறங்க வேண்டும். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஜெட்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு தகவல் வந்தது. அதில் விமானம் ஓடுபாதையில் இருந்து வானில் எழுந்த போது, விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தின் டயர் பாகங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து விமானி, விமான என்ஜின் பாகங்களை ஆய்வு செய்த போது அதில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் விமானத்தின் விமானி இதுபற்றி கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விமானத்தை உடனடியாக கொச்சியில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்க அறிவுறுத்தினர். மேலும் கொச்சி விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் விமானம் பத்திரமாக தரை இறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்றிரவு 7.19 மணிக்கு தனியார் விமானம் கொச்சி நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 191 பயணிகள் இருந்தனர். மேலும் 2 விமானிகள், 4 ஊழியர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். இது பற்றி விமான நிலைய அதிகாரி கூறும்போது, விமானத்தில் கோளாறு இருப்பது தெரியவந்ததும், விமானத்தை பத்திரமாக இறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *