சர்வதேச வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் சாதித்து வரும் மாற்றுத்திறனாளி இளைஞர்.!

குடியாத்தம்: சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் சர்வதேச வீல் சேர் கூடைப்பந்து போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் விளையாட்டு வீரர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த எம்.வெங்கடாசலம். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த மணியின் மகன் வெங்கடாசலம்(36). 10- ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கடந்த 2009- ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, இடுப்புக்கு கீழே செயலிழந்த நிலைக்கு ஆளானார். சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு தேறிய வெங்கடாசலம், 3 சக்கர வாகனத்தில்தான் செல்கிறார். விபத்துக்கு முன்னர் கிரிக்கெட், கராத்தே விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற வந்த இவரால், விபத்துக்குப் பின் அந்த விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை. இவருக்கு சிகிச்சை அளித்த பிசியோதெரபி மருத்துவர் ரமேஷ், இவர் வீல் சேரில் அமர்ந்தவாறு கூடைப்பந்து விளையாட வழிகாட்டினார். விபத்து நடந்த 4 ஆண்டுகளுக்குப் பின் இவர் இந்த கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். இந்த விளையாட்டில் இவருக்கு ஆர்வம் அதிகரித்தது. இதன் பலனாக படிப்படியாக வட்ட, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். மாநில அளவில் 25 பதக்கங்களை வென்ற இவர் தேசிய போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்று 19 பதக்கங்களை வென்றுள்ளார். இதையடுத்து சீனா, தாய்லாந்து, மலேசியா, நேபாளம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாடியுள்ளார்.தாய்லாந்து, நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் முதலிடமும், மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 3 ஆம் இடமும் பிடித்தார். தமிழக அணியில் தொடர்ந்து இவர் 7 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர் தமிழக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் ராமன், நந்தகோபால், சண்முகசுந்தரம், தற்போதைய ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோரிடம் வாழ்த்துப் பெற்றுள்ளார். சக மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுகளில் ஈடுபடவும் தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *