
சென்னை: தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது இதில் உரையாற்றிய முதல்வர் கூறுகையில்:- பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துவிவாதிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. சமூக, கல்வி ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதுதான் சரியானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-வது பிரிவில் சமூக, கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதே வரையறை. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார ரீதியாக என்ற அளவுகோலை புகுத்த நினைக்கிறது மத்திய அரசு. இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என இதுவரை கூறி வந்த சிலர், 10% இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கின்றனர். அதன் சூட்சமத்தை விளக்கமாக சொல்லத் தேவையில்லை. அரசியல் லாப நோக்கம் பற்றி பேச விரும்பவில்லை.சமூகநீதி கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த 10% இடஒதுக்கீடு தொடர்ந்தால் சமூக நீதி உருக்குலைந்து போகும்’ என்று பேசியுள்ளார்.