
உத்திரபிரதேசம்: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் நேற்று (அக்.,10) காலமானார். அவரது பூர்வீக கிராமமான சைபய்யில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ், உடல்நலக் குறைவால் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று (அக்.,10) காலமானார். அவருக்கு வயது 82. இவர் மூன்று முறை உத்தர பிரதேசத்தின் முதல்வர், மத்திய அமைச்சர், 10 முறை எம்.எல்.ஏ., ஏழு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.முலாயம் சிங் யாதவின் உடல், குருகிராம் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டம் சைபய்க்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். முலாயம் மறைவுக்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும், அரசு முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற முலாயம் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். பின்னர் முலாயம் சிங் யாதவ்வின் பூர்வீக கிராமமான சைபய்யில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.