சமயபுரம் கோவிலுக்கு நடைபயணம்: பெண் பக்தரின் தலைமுடி ஜெனரேட்டர் காத்தாடியில் சிக்கி பலி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் காரனூர் அருகே உள்ள குதிரைசந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் வீரன் (28). இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு முத்தரசன் (4) கனிமொழி (2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் திவ்யா கடந்த சில ஆண்டுகளாக தனது பெற்றோரின் வேண்டுதலுக்கிணங்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து நடைபயணம் சென்று வருவது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டும் கடந்த வியாழக்கிழமை தனது பெற்றோரின் ஊரான வசிஷ்டபுரம் கிராமத்திற்கு சென்று மாலை அணிந்துள்ளார்.பின்னர் தாய் வீட்டில் தங்கியிருந்து வெள்ளிக்கிழமை சமயபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களோடு நடை பயணமாக திட்டக்குடியில் இருந்து கிளம்பி சமயபுரம் நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் திவ்யா உடல் அசதியால் தனது மகள் கனிமொழியை தூக்கிக்கொண்டு பின்னால் வந்த ஜெனரேட்டர் வசதியுடன் ஒலிபெருக்கி கட்டி வந்த ஆட்டோவில் உட்கார்ந்து வந்துள்ளார்.அப்போது அசதியில் தூங்கிய போது திவ்யாவின் தலைமுடி ஜெனரேட்டர் காத்தாடியில் சிக்கியுள்ளது. வாகனத்தில் ஒலிபெருக்கியின் சத்தத்தால் திவ்யா கத்தியது டிரைவருக்கு கேட்கவில்லை. இதில் திவ்யாவின் தலை ஜெனரேட்டரில் சிக்கி பலமாக அடிபட்டது. திவ்யாவின் கைக்குழந்தை அருகிலேயே கத்திக்கொண்டிருந்தது நல்ல வேலை கை குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை.ஜெனரேட்டர் நின்றவுடன் குழந்தை சத்தத்தை கேட்டு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் பார்த்துள்ளார். அப்போது திவ்யா அடிபட்டு கிடந்தது தெரியவந்தது. பின்னர் முன்னே நடந்து சென்ற பக்தர்களிடம் டிரைவர் கூறியதையடுத்து பக்தர்கள் ஓடி வந்து பார்த்துவிட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் திவ்யாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பகுஜன் குரல் செய்திக்காக மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *