
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து சமீபத்தில், ‘லைக்கா’ சினிமா பட நிறுவனத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உதயநிதி அறக்கட்டளைக்கு நன்கொடை என்ற பெயரில் பணம் கைமாறி இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.
பின், அறக்கட்டளைக்கு சொந்தமான, 36.30 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கினர் அமலாக்க துறை அதிகாரிகள். வங்கி இருப்பில் இருந்த, 34.70 லட்சம் ரூபாயையும் முடக்கினர். ஆனால், அறக்கட்டளை நிர்வாகி பாபு, ‘சட்ட விரோத பண பரிமாற்றமே நடக்கவில்லை’ என மறுத்துள்ளார்.
இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- உதயநிதி அறக்கட்டளை அலுவலகத்தில், 12 மணி நேரம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப்படையில் தான், சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.
சட்ட விரோத பண பரிமாற்றத்தின் பின்னணியில், உதயநிதியின் நிழல் போல் செயல்படும் நெருங்கிய நண்பர் இருப்பது தெரியவந்துள்ளது. இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். சென்னையைச் சேர்ந்த இந்த நபரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.