சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பினால் கடும் நடவடிக்கை: முகவர்களுக்கு மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரிக்கை.!

சென்னை: சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்கள் சிலரை, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, அரசு பதிவு பெறாத மற்றும் சட்டவிரோதமான முகவர்கள், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு இந்த இளைஞர்கள், ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை செய்ய வலியுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் மூலமாக தாய்லாந்தில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.இச்சூழ்நிலையில், தற்போது கம்போடியா நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. அங்கு உள்ள தமிழ் இளைஞர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தமிழக அரசு தொடர்பில் உள்ளது. மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த கம்போடியா நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரவேண்டிய நபர்கள் குறித்த தொலைபேசி எண்கள் அல்லது அவர்கள் அங்கு பணிபுரியும் நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை 9600023645, 8760248625, 044-28515288 எண்களில் தெரிவிக்கலாம். இதுபோன்று சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *