சட்டம் ஒழுங்கை மக்களே கையில் எடுத்துக் கொண்டால் நீதிமன்றம் எதற்கு?” – உயர் நீதிமன்றம் கேள்வி.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலியான மாணவியின் தந்தை ராமலிங்கம் இது தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. “அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது” என்றனர்.

மேலும், மாணவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என அரசுத்தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் வெடித்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாக தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும். உளவுத்துறையின் அறிக்கை குறிப்பிடும் போது இந்த சம்பவம் சிலர் மட்டுமே வன்முறைக்கு காரணம் அல்ல. காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. சட்டத்தையும் முறையாக அமல்படுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது உள்ளது. சமூக வலைதளங்களில் பரப்புரை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையாளர்களை கண்டறிய தமிழக டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம். டிஜிபி சிறப்புப்படை அமைத்து, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? வன்முறையில் ஈடுபட்டது யார்?… மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்டால் நீதிமன்றம் எதற்கு?கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் உள்ளது. கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதியளிக்கிறோம். மறு பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர் வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இறுதி சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும். உடலை மறு பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் தந்தை, தனது வழக்கறிஞருடன் உடல் பிரேத பரிசோதனையின் போது உடன் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்” என்றார்.இதனிடையே “வன்முறைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என உயிரிழந்த மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *