சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் பணம், போதைப் பொருள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல்!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் பணம், போதைப் பொருள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருள், மது பாட்டில்கள் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதில் கடந்த 2017ம் ஆண்டு இதே 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற போது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விட 4 மடங்கு அதிகமாகவும். பஞ்சாபில் ரூ.510.10 கோடியும் உத்தரப் பிரதேசத்தில் ரூ.307. 92 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் ரூ.160.83 கோடியும், உத்தராகண்டில் ரூ.18.81 கோடியும், கோவாவில் ரூ.12.73 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆக மொத்தம் ரூ.1,018 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தவிர பஞ்சாபில் ரூ. 109 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், உத்தரப் பிரதேசத்தில் ரூ.8 லட்சம் லிட்டருக்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.5 மாநிலங்களிலும் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களின் மதிப்பு, ரூ.569.52 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி போன்று விலை மதிப்புள்ள பொருட்கள் ரூ. 115. 54 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *