சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரது மகள் கவிப்பிரியா செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியின் வளாகத்தில் இருந்த மகளிர் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி கவிப்பிரியாவை சக மாணவிகள் கிண்டல் செய்ததால் அவரது தந்தைக்கு செல்போன் மூலம் கவிப்பிரியா பேசிவிட்டு மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் 29ம் தேதி மாலை கவிப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.

கவிப்பிரியாவின் தந்தை சிவப்பிரகாசம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கவி பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும், அவரை ராகிங் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உடலை வாங்க மறுத்தனர்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி இழப்பீடும், தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் அரசு அதிகாரிகள், கவிபிரியாவின் உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவியின் உயிரிழப்பு குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது எனவும், குற்றம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்த பின் கவிபிரியாவின் உடலை அவரது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *