
கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து, ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டும், வாகனங்களை தீ வைத்தும் எரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து மதம் பற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பரபரப்பு போச்சை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதனை தொடர்ந்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில், நாடு முழுதும் நடந்த என்.ஐ.ஏ., சோதனையை தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டது.இதனால், கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ராஜ ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன், 63; ஆர்.எஸ்.எஸ்., தாம்பரம் பகுதி மாவட்ட தலைவர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் துாங்கினார்.நேற்று அதிகாலை, வீட்டின் வறண்டாவில் பலத்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சீதாராமன் வெளியே வந்து பார்த்துபோது, பெட்ரொல் குண்டு வீசப்பட்டிருந்தது. குடும்பத்தினரும் சேர்ந்து, எரிந்து கொண்டிருந்த தீயை, தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.போலீசார் விரைந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சீதாராமன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி, வாகனத்தில் தப்பியது தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி, எஸ்.ஆர்.டி., நகர் பின்புற வீதியைச் சேர்ந்தவர் சிவசேகர், 50; பா.ஜ., முன்னாள் நகர துணை தலைவர். டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.இவருக்கு சொந்தமான மூன்று கார்களை, தன் வீட்டின் முன்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ‘மாருதி ஸ்விப்ட்’ காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். திண்டுக்கல், குடை பாறைப்பட்டியைச் சேர்ந்த பா.ஜ., மேற்கு நகர தலைவர் பால்ராஜிக்கு சொந்தமான குடோனில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள் தீ வைத்ததில் கார், 5 டூ வீலர்கள் எரிந்து நாசமாகின. மேலும், இரு டூ வீலர்கள் சேதமடைந்தன.தீ வைத்தவர்களை கைது செய்யக் கோரி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் தனபாலன் தலைமையில், 70க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் – -தேனி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ நிலைய அலுவலராக பணிபுரிபவர் டாக்டர் மனோஜ்குமார். இவர், கேணிக்கரை, திருவள்ளுவர் தெருவில் கிளினிக் நடத்துகிறார். அதன் மேல்தளத்தில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு டூ வீலரில் வந்த மூன்று பேர், கிளினிக் அருகே நின்ற இவரின் இரு கார்களின் வெளிப்புறத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.அங்கிருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டதால் தப்பினர். ராமநாதபுர எஸ்.பி., தங்கதுரை சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.இது தொடர்பாக, ராமநாதபுரம், பாசிபட்டறைக்கார தெருவைச் சேர்ந்த முகமது இஸ்காக் ஜின்னா மகன் தீனுல் ஆசிப், 21, என்பவரை பிடித்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். அனைத்து சம்பவங்களிலும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளாக பார்த்து வருகிறோம். சில வழக்குகளில் குற்றவாளிகளின் அடையாளம் தெரிகிறது; விரைவில் கைது செய்யப்படுவர்.சமூக வலைதளங்களில், இரு சமூகத்துக்கு இடையே பிரச்னை ஏற்படும் வகையில், தகவல்கள் பரப்பினால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்படுவர்.பாதுகாப்பில், 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்காலிக சோதனை சாவடிகள், 28 இடங்களில் அமைத்திருக்கிறோம். கூடுதலாக ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.