
மதுரை: ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோயிலில் கடந்த 10 நாட்களாக வைகாசி பெருவிழா நடந்து வருகிறது. திருவிழாவை ஒட்டி அப்பகுதியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தை கட்சியின் பேனரை ஒரு தரப்பு பிரிவினர் அருவாளால் கிழித்தெறிந்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் நள்ளிரவில் அருவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்த பிறகு வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் ஒரு கார் உட்பட 34-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமானது. இதை தடுக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த , திருக்குமார், மணிமுத்து, பழனி குமார், செல்வகுமார், 4 பேர் மீது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 6 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தாக்குதல் தொடர்பாக 24 பேர் மீது ஒத்தக்கடை போலீசார் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர். 12 நபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பதற்றம் நிலவுவதால் திருமோகூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.