
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சாகும்வரை ஆயுள் தண்டணையை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், சிபிசிஐடி-யும், கோகுல்ராஜின் தாயாரும் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கோகுல்ராஜ், தங்கள் சமூகத்து பெண்ணை காதலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவரை கடத்தி சென்று ஆணவக்கொலை செய்த யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு கடந்த 8-ம் தேதி மதுரையிலுள்ள தீண்டாமை வன்கொடுமைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வழக்கில் சிசிடிவி பதிவின் உண்மைத்தன்மை, தடய அறிவியல் துறையின் அறிக்கை, உடற்கூராய்வு அறிக்கை அனைத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக சந்தேகத்துக்கு இடமில்லாமல் அமைந்தது.அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகனின் சிறப்பான வாதம், சான்றாவணங்கள், பல முன்னோட்ட வழக்குகளின் தீர்ப்புகள் என இந்த வழக்குக்கு உதவி செய்தன.

தண்டனைக்கு அளிக்கப்பட்ட பின் உடனே சிறையில் அடைக்கப்பட்ட 10 பேரும் தற்போது தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.அதில், “சிசிடிவி காட்சிகள், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்ததை அடிப்படையாக கொண்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், அதை கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கவும் வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இன்று விசாரணைக்கு வந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி-யும் கோகுல்ராஜின் தாயார் சித்ராவும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்ட கோகுல்ராஜ் வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.