
மதுரை:
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உள்பட கூட்டாளிகள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜோதிமணி ஏற்கனவே இறந்துவிட்டார்

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்தநிலையில், சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று தீர்ப்பளித்தார்.
மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேர் விடுதலை என்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகிற 8-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான சந்தியூர் பார்த்திபன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.