கொவிட்-19 ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்.!

உலகை உலுக்கி வந்துள்ள கொவிட்-19 பெருந்தொற்று பரவல் ஒரு முடிவுக்கு வர இதுதான் சிறந்த தருணம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.‘‘இன்னும் நாம் அந்த இலக்கை அடையவில்லை. ஆனால் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது,’’ என்று அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறினார். எனினும் உலகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் ஊஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது.ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி உலக மக்களை இன்னும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவையும் இந்த கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.‘‘உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகிறன. 2020 மார்ச் மாதத்தை விட தற்போது பலி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. கொரோனா இன்னும் முற்றிலும் முடியவில்லை. ஆனால் அதன் முடிவு நமக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது. இந்த வாய்ப்பை நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதிக திரிபுகள், இறப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,’’ என்றும் டெட்ரோஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *