கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 865 மனுக்கள் பெறப்பட்டு 781 மனுக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 42 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரைப்படி 20-3-2022-ம் ஆண்டுக்கு முன்னர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பத்தாரர்கள் 60 நாட்களுக்குள்(அதாவது 18.5.2022) மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் 20-3-2022 முதல் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பதாரர்கள் 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பித்திட வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கால அளவிற்குள் மனுக்கள் சமர்ப்பிக்க தவறியவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம். அவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுக்கள் ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு காணும்.

எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிவாரண உதவி கோரும் நபர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *