கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி.!

சென்னை: எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து, மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தினர். விடாது மழை பெய்தும் நாம் தமிழர் கட்சியினர் கையில் கொடியுடன் உற்சாகமாக பங்கேற்றனர்.திராவிட கட்சிகள் பாணியில் இந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில், பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது. தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கும்! தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும்! அதற்கான தொடக்கமாக வருகின்ற ‘நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்’ அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது என கூறியிருந்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதலே பெருமழை பெய்து வருகிறது. காலையில் இருந்தும் மழை விட்டு பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அடாது மழை பெய்தாலும் சீமான் தலைமையில் விடாது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு பேரணியில் ஏராளமானோர் கையில் குடையுடன் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *